வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
கணக்கெடுப்பு
மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகத்தின் சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேளாண்மை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநில அளவில் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இந்த கணக்கெடுப்பின் ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் நடைபெற உள்ள வேளாண்மை கணக்கெடுப்பு பணியை முதல் முறையாக செயலி வழியாக கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்த கணக்கெடுப்பை தாசில்தார்கள் மேற்பார்வை செய்ய உள்ளனர். 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முகாம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், விஸ்வநாதன், புள்ளியல் துறை இயக்குனர் ஜேக்கப் வேதகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் கொள்கைகள்
பயிற்சி முகாமில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தமிழகத்தில் நேரடி மற்றும் குத்தகை விவசாயத்தில் எவ்வளவு பேர் ஈடுபட்டுள்ளார்கள். பெரிய விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் மற்றும் நடுத்தர விவசாயிகள் எவ்வளவு பேர் உள்ளனர். சமூக அடிப்படையில் எவ்வளவு பேர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அதன் அடிப்படையில் வேளாண் கொள்கைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணியை தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க வேண்டும் என்றார். இந்த பயிற்சி முகாமில் தாசில்தார்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.