ஆசிரியர்களுக்கு கல்வெட்டு பயிற்சி


ஆசிரியர்களுக்கு கல்வெட்டு பயிற்சி
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கு தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கு தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சி நடந்தது.

கல்வெட்டு பயிற்சி

தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கு தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சியை அளித்தது. இந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வு குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பழமையான பொருட்களை பாதுகாப்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மாணவர்களை நேரடியாக கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு வரலாற்றின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் பலருக்கு நடுகற்கள் குறித்து தெரிவதில்லை. அவர்களுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதையல் என்ற பெயரில் வரலாற்றுச் சின்னங்களை யாரும் சிதைக்கக்கூடாது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

பாதுகாக்க வேண்டும்

இந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு கல்வெட்டை எவ்வாறு படியெடுத்து படிப்பது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பாறை ஓவியங்கள், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி குறித்து அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் விளக்கி கூறினார். தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொல்லியல் களங்கள், கல்வட்டம், கல்திட்டை, அகழ்வாய்வு குறித்து படங்களை காட்டி விளக்கம் அளித்தார்.

வரலாற்று ஆய்வு குழுத் தலைவர் நாராயணமூர்த்தி பழங்கால மரபுசார் பொருட்களையும், நினைவுச் செல்வங்களையும், பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். இதில், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியின் போது நகர்மன்ற உறுப்பினர் பாலாஜி, அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story