ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு சிகை அலங்கார பயிற்சி


ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு சிகை அலங்கார பயிற்சி
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 3:04 PM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் அலகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் அலகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிற்சி திட்டங்கள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மகா அழக கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சியை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

மாத சம்பளம்

மேலும், இப்பயிற்சியை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெற கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story