உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முகாம்
உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முகாம் நடந்தது
காரைக்குடி
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மருந்து நிர்வாகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் காரைக்குடி நகர் மற்றும் சாக்கோட்டை வட்டார உற்பத்தியாளர்கள் மற்றும் மறு பொட்டலமிடும் தொழில்புரிவோருக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமை தாங்கினார். முகாமில் உணவு பாதுகாப்பு துறையின் வருடாந்திர கணக்கு பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது. மேலும் கடைகளில் பான்மசாலா, குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. அதை மீறி விற்பனை செய்தால் உடனடியாக 94440 22322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். ஒருமுறைக்கு மேல் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் வழங்கலாம். அதற்குரிய பணத்தை அந்த நிறுவனத்திடமே பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் உடனடியாக உணவு பாதுகாப்பு துறையினரால் அபராதம் விதிக்கப்படும். உணவு பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுபொட்டலமிடுவோர் அனைவரும் அவர்களுடைய வருடாந்திர கணக்குகளை 31-ந் தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத பயனாளிகளுக்கு தினந்தோறும் ரூ.100 வீதம் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் காரைக்குடி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், சாக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.