சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தையொட்டி நேற்று, பெரியகுளம், போடி பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று, பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகார நாகராஜர், நந்திபகவானுக்கு பால், தயிர். சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு மல்லிகை பூ, ரோஜாபூ உள்ளிட்ட பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், கம்பம் சாலையில் உள்ள காளியம்மன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலிலும் சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது. பின்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவ பெருமானுக்கு காய்கறிகளை கொண்டு தேசிய கொடி போல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.