சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது. இதேபோல் காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதேபோல் அரியலூரில் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அரியலூர் குறிஞ்சான் குளக்கரையில், ரெயில் நிலையம் அருகே உள்ள காசி விசுவநாதர் கோவில், செட்டி ஏரிக்கரையில் உள்ள கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஜெயங்கொண்டம் பகுதியில் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தியெம்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கழுமாலைநாதர் கோவிலில் பிரகார உலா நடைபெற்றது.
ஆண்டிமடம்-விளந்தையில் உள்ள தர்மசம்வர்த்தினி மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீசுவரர், விளந்தை அழகு சுப்பிரமணியர், கூவத்தூர் விஸ்வநாதர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், பெரிய கிருஷ்ணாபுரம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.