கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதிசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு பன்னீர், திருமஞ்சனம், அரிசி மாவு, பால் தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், விபூதி, சந்தனம், சொர்ண அபிஷேகம் உள்பட பல்வேறு திரவ வகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர், சிதம்பரேஸ்வரர் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சா மி தரிசனம் செய்தனர். இதேபோல் தென்கீரனூர் அண்ணாமலையார் கோவில், சோமண்டார் குடி ஆலத்தூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஏமப்பேர்
மேலும், ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையோட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் ,தேன் உட்பட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சட்ட கணேசன் செய்திருந்தார்.
தியாகதுருகம்
மேலும், தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடைபெற்றது. நந்தீஸ்வரருக்கு 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் யோகநாயகி சமேத ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவில், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில், வடதொரசலூர் பெரியநாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல்லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.