சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பிரசித்திபெற்ற நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் ஆத்மநாதசுவாமி கோவில், எறஞ்சி கைலாசநாதர் கோவில் உள்பட பல்வேறு சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், சங்கராபுரம் சங்கரலிங்கேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.