தமிழர்களின் கலாசாரத்தை பிரதமர் நிலைநாட்டுகிறார்


தமிழர்களின் கலாசாரத்தை பிரதமர் நிலைநாட்டுகிறார்
x

தமிழர்களின் கலாசாரத்தை பிரதமர் நிலைநாட்டுகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

வாடிப்பட்டி,

தமிழர்களின் கலாசாரத்தை பிரதமர் நிலைநாட்டுகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சாராய ஆறு

பரவை பேரூராட்சியில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் கலா மீனா ராஜா, பேரூர் செயலாளர் ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சவுந்தர பாண்டியன் வரவேற்றார்.

இதையடுத்து செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இப்பகுதியில் உள்ள கண்மாயை குடிமராமத்து செய்ததால் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக தண்ணீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. பரவை பேரூராட்சிக்கு மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் நலத்திட்ட பணிகள் செய்துள்ளோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று கூறினார்கள். ஆனால் இப்போது சாராயம் ஆறாக ஓடுகிறது.

செங்கோல்

கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல உயிர்கள் பலியாகி வருகிறது. தி.மு.க. அரசின் அவலங்களுக்கு இந்த கள்ளச்சாராயம் ஒரு எடுத்துக்காட்டு. கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்வதுதான் இந்த தி.மு.க. ஆட்சியின் அவலம். சோதனை செய்யும் அதிகாரிகளை தடுத்து நிறுத்துவது, மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. கஞ்சாவை தமிழ்நாட்டில் தடுக்க முடியவில்லை. டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சுதந்திரமாக செயல்படவிட்டால் கஞ்சா, கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் இருக்காது.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை தி.மு.க. புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வினர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். சோழ மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலை அன்று ஆதீன பெருமக்கள் நேருவிடம் ஒப்படைத்தனர். அதே செங்கோலை புதிதாக அமைகிற நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி வழிவகை செய்திருக்கிறார்.

மோடியை பாராட்டவேண்டும்

இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. இதனால் தமிழர்கள் மோடியை பாராட்ட வேண்டும். ணும். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை, தமிழ் வரலாற்றை எடுத்து கூறும் பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை கண்டித்து நாளை மறுநாள் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரமேஷ், செபஸ்தியம்மாள் பிரகாசம், கீதா செந்தில், வின்சி தர்மேந்திரா, திருஞானகரசி திருப்பதி, நாகேஷ்வரிதிலகர், ஜெயராஜ், நாகமலை, முத்துபாண்டி, செந்தில், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story