பிரணவ் ஜூவல்லரி ஈரோடு கிளைக்கு 'சீல்' பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
பிரணவ் ஜூவல்லரி ஈரோடு கிளைக்கு 'சீல்' வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
பிரணவ் ஜூவல்லரி ஈரோடு கிளைக்கு 'சீல்' வைத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பிரணவ் ஜூவல்லரி
மதுரையை தலைமை இடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் கிளைகள் மதுரை, சென்னை, கோவை, கும்பகோணம், ஈரோடு, நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டன. இந்த ஜூவல்லரி சார்பில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீத வட்டி அல்லது 10 மாதங்களுக்கு பின்னர் செய்கூலி, சேதாரம் இன்றி 106 கிராம் தங்க நகை பெறலாம் என்றும், பழைய நகைகளை கொடுத்தால், ஒரு வருடம் கழித்து எந்தவித செய்கூலி சேதாரமும் இல்லாமல் புதிய நகைகளை பெற்று கொள்ளலாம் எனவும் விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி ஈரோட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் தவணைத்தொகை செலுத்தினர். பழைய நகைகளையும், பல லட்சம் ரூபாயையும் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனம் உறுதியளித்தபடி நகை, பணத்தின் முதிர்வு காலத்துக்கான நகையை வழங்கவில்லை என தெரிகிறது. மாறாக பல்வேறு இடங்களில் பிரணவ் ஜூவல்லரி கிளையை மூடியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு உள்பட பல இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்படி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள், கிளை மேலாளர்கள் மீது மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு கிளைக்கு 'சீல்'
இதற்கிடையில் ஈரோடு காவிரி ரோட்டில் செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி கிளையில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் இருந்து முக்கிய ஆவணங்கள், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள், பணப்பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரம் மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பிரணவ் ஜூவல்லரி ஈரோடு கிளைக்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பிரணவ் ஜூவல்லரி ஈரோடு கிளையில் முதலீடு செய்துள்ள 100-க்கும் மேற்பட்டோர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளோம். அந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்' என்று கூறி இருந்தனர்.