கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

புனித வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சேலம்

புனித வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

புனித வெள்ளி

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி புனித வெள்ளியான நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை

சேலம் 4 ரோடு அருகேயுள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சிலுவையில் இயேசு அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகளை தியானம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இயேசுபிரான் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஒருவர் இயேசு போல் வேடமணிந்து சிலுவையை சுமந்து தத்ரூபமாக சென்றார். இதைத்தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிலுவைப்பாடு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியில் தேவாலயத்தில் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இதர தேவாலயங்களில்

சேலம் அழகாபுரத்தில் உள்ள மிக்கேல் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி பங்கு தந்தை சாலமன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல், சூரமங்கலம் தூய இருதய ஆண்டவர் ஆலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், கோட்டை லெக்லர் ஆலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story