பெரியம்மை நோயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை


பெரியம்மை நோயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், கால்நடைகளை தாக்கும் இலம்பி நோய் நச்சுயுரி மூலம் பரவுகிறது. கொசு, ஈ, உண்ணிக்கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகள், கறவையாளர்கள், கன்றுக்குட்டிகள், பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும்போதும் நோய் உள்ள பகுதிகளிலிருந்து மாடுகளை வாங்கி வருவதன் மூலமாகவும் பரவுகிறது. கண்களில் நீர் வடிதல், மூக்கில் சளி ஒழுகுதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் கண்டு கண்டாக வீக்கம் காணப்படுதல், உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து அதன் மத்தியிலிருந்து சீழ்வழிதல், நினநீர் சுரப்பிகள் பெரிதாக காணப்படுதல், கால்கள் வீங்கியிருத்தல், மாடுகள் சோர்வாக இருத்தல் போன்ற தாக்கங்கள் நோயின் அறிகுறிகளாகும். இதனால் பால் உற்பத்தி குறையும். மாடு சினைப்பிடிப்பதில் பாதிப்பு ஏற்படும், தீவனம் சரியாக உட்கொள்ளாமல் உடல் எடை குறைந்து காணப்படுதல், மடிநோய் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதனை கட்டுப்படுத்திட பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையிலிருந்து தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும். சுற்றுப்புற சூழல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து வழங்க வேண்டும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுப்பதே நோய் பரவுதலை தடுக்கும். மேலும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி உரிய சிகிச்சை வழங்க வேண்டும். வரும்முன் காப்பதே சிறந்த வழி. ஆகையால் தங்களது கால்நடைகளை உரிய முறையில் பராமரித்திட தேவையான விழிப்புணர்வை கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்புத்துறையினர் வழங்க வேண்டும் என்றார்.


Next Story