மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
போலி மதுபானங்களால் மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
போலி மது விற்பனை
தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக்கில் போலி மது விற்பனையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இன்றைக்கு(அதாவது நேற்று) மதுரை மேலூர் அருகே கிடாரிப்பட்டி அரசு மதுக்கடையில் மது குடித்த கோவில் பூசாரி உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்குள் காவல்துறையினர் மதுபானத்தில் பெயிண்ட் கலந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். மதுபான தொழிற்சாலையில் இருந்து கணக்கில்லாமல் நேரடியாக டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் தான் இது போன்ற செயல்கள் நடக்கின்றன.
முன்னெச்சரிக்கைநடவடிக்கை
அரசு மதுபான கடைக்கு அரசுக்கு தெரிந்து விற்பனை செய்யப்படும் மதுபானங்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வரி ஏய்ப்பும் நடக்கிறது. மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எனது பேட்டியை முழுமையாக பார்க்காமல் யாரோ சொன்னதை வைத்து தவறாக பேசியுள்ளார். எக்கியார் குப்பம், செங்கல்பட்டு சம்பவத்தை திசை திருப்புவதற்காக மேல்பாதி சம்பவத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றுதான் கூறினேன். ஆனால் மாவட்ட அமைச்சர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் முட்டு கொடுக்க பார்க்கிறார். இதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வன், நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பெரும்பாக்கம் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.