தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x

தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மருத்துவர் பணியிடங்களில், தமிழ்வழியில் கற்றோருக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மாத காலத்துக்குள் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்று செயல்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகளில் தமிழ் வழியில் கற்றோருக்கான முன்னுரிமை இடம்பெறவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் நியமனம் மேற்கொள்ளும்போது, தமிழ் வழியில் கற்றோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அந்த ஒதுக்கீட்டை மருத்துவர் நியமனத்திலும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை சென்னை ஐகோர்ட்டில் முன்வைக்கப்பட்டது. அந்த மனுவில், பள்ளிப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள், மருத்துவக் கல்வி தமிழில் இல்லாத காரணத்தினால் ஆங்கிலத்தில் படிக்க நேர்கிறது.

ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாக கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, மருந்தாளுனர், இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது என்பதை குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், இந்த கோரிக்கையை தமிழக அரசு ஒரு மாத காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழ்வழியில் படித்தவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப் பணிக்கான நியமனத்திலும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story