3-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்

ஓமலூர்
ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா (23). இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். தற்போது பவித்ரா கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே ஊருக்கு வந்து செல்வதாக கூறிய மோகன்ராஜ் அதன்பிறகு சென்னை செல்லவில்லை. மாறாக பவித்ராவை புறக்கணித்ததாக தெரிகிறது. உடனே பவித்ரா, கணவர் வீட்டுக்கு வந்து தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அவர் மறுப்பு தெரிவிக்கவே ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் பவித்ரா புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தன்னுடன் சேர்ந்து வாழக்கோரி காதல் கணவர் வீட்டு முன்பு பவித்ரா தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. கர்ப்பிணி நடத்தி வரும் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






