காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம்


காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம்
x
சேலம்

கருப்பூர்:-

ஓமலூர் அருகே காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் திருமணம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா (வயது 23), செவிலியர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பஸ் பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளர் முருகேசன் மகன் மோகன்ராஜூம் காதலித்து கடந்த மே 22-ந் தேதி காஞ்சீபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சென்னையில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். பவித்ரா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் மோகன்ராஜ், தன்னுடைய தங்கைக்கு பிறந்த குழந்தையை பார்க்க ஓமலூர் வந்துள்ளார். அதன்பிறகு மனைவி பவித்ராவை பார்க்க செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைய பவித்ரா, மோகன்ராஜை தொடர்பு கொண்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

7 பேர் மீது வழக்கு

உடனே பவித்ரா, வேலகவுண்டனூரில் உள்ள தன்னுடைய கணவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு மோகன்ராஜிடம் தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு 100 பவுன், ரூ.10 லட்சம் கொண்டு வந்தால்தான் மோகன்ராஜூடன் சேர்ந்து குடும்பம் நடத்த முடியும் என கணவர் தரப்பினர் கூறியதாக தெரிகிறது. மேலும் அவதூறாக பேசி பவித்ராவை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பவித்ரா ஓமலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மோகன்ராஜ், அவருடைய தந்தை முருகன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போராட்டம்

இதற்கிடையே தன்னுடன் சேர்ந்து வாழுமாறு பவித்ரா, மோகன்ராஜ் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. அவருடன் உறவினர்கள் உள்ளனர். அவர், அங்கேயே தங்கி இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story