விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கோமாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் உமா (வயது 17). இவர் விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியான உமா கோமாலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இதையடுத்து உமாவை பார்க்க விமல்ராஜ் குடிபோதையில் அங்கு சென்றதாக தெரிகிறது. இதைபார்த்து போபமடைந்த உமா தனது கணவரை கண்டித்ததோடு, இங்கிருந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. மேலும் பெங்களூருவில் உள்ள தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடைய கணவர் விமல்ராஜை இங்கிருந்து போக சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அவர், உமாவை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.
இருப்பினும் மனமுடைந்த உமா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
போலீசார் விசாரணை
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். இது குறித்து உமாவின் அண்ணன் உதயகுமார் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.