எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி:நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்- பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது


எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி:நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்-  பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியில் ரோஷோரியா என்பவரின் மனைவி வனிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் பணிக்கம்பட்டியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

சாதாரண காய்ச்சல் தொந்தரவு உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று கண்டறியப்பட்டது. இதற்கிடையில் வட்டார மருத்துவ அலுவலர் அழகு ராஜலட்சுமி தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பணிக்கம்பட்டியில் கிருமி நாசினி மருந்து தெளித்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காய்ச்சல் பரிசோதனை

கிராமங்களில் ஆடு, மாடுகள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. எலி காய்ச்சல் ஆடு, மாடு, நாய்கள் மற்றும் எலிகளின் எச்சம், சிறுநீர் மூலம் பரவுகிறது. எனவே ஆடு, மாடு, நாய்களை தொட்ட பிறகு கைகளை நன்றாக சுத்தமாக கழுவிய பிறகே சாப்பிடுவது, தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து, வடிக்கட்டி மூடி வைத்து குடிக்க வேண்டும். ஆடு, மாடுகள், நாய்கள் வளர்க்கும் இடங்களை கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். தண்ணீரில் குளோரின் கலந்து வருவதால் மருந்து வாசனையாக தான் இருக்கும் இதற்காக குடிநீர் வினியோகம் செய்யும் ஊழியர்களிடம் தகராறு செய்ய கூடாது.

குளோரின் செய்த தண்ணீரை குடித்தால் தான் நோய் பாதிப்பை தடுக்க முடியும். கடந்த 3 நாட்களில் நடந்த முகாம்கள் மூலம் சுமார் 200 பேர் வரை பயனடைந்து உள்ளனர். முகாம்களில் சாதாரண காய்ச்சல் மட்டும் கண்டறியப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. வேறு எந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் இல்லாததால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. பொதுமக்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மட்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story