கல்லூரி மாணவி கொலை வழக்கில் கர்ப்பிணி பெண், கணவனுடன் கைது-பரபரப்பு வாக்குமூலம்
கல்லூரி மாணவி கொலை வழக்கில் கர்ப்பிணி பெண், கணவனுடன் கைது செய்யப்பட்டார். மேலும் கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
பொள்ளாச்சி
கல்லூரி மாணவி கொலை வழக்கில் கர்ப்பிணி பெண், கணவனுடன் கைது செய்யப்பட்டார். மேலும் கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி கொலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கவுரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2-ந்தேதி பெண் பிணமாக கிடந்தார். தகவலின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த சுபலட்சுமி (வயது 20) என்பதும், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். ஐ.டி. படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் கொலை நடந்த வாடகை வீட்டில் கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த சுஜய் (28) என்பவர் வசித்து உள்ளார். இதற்கிடையில் வீட்டில் பெண் இறந்து கிடப்பதாக சுஜய்யின் தாய் தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. எனவே அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை நடந்த போது சுஜயையுடன் அவரது மனைவி ரேஷ்மா (27) உடன் இருந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் வால்பாறை துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமலைசாமி, கணேசமூர்த்தி, நாகராஜ் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சுஜயின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்த போது, பாலக்காடு ரோட்டில் சுவிட்ச் ஆப் ஆனது தெரியவந்தது.
எனவே அவர்கள் கேரளாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் கோபாலபுரம் சோதனைச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுஜய், அவரது மனைவி ரேஷ்மாவுடன் மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு தப்பி செல்வது தெரியவந்தது.
தம்பதி கைது
இதைத்தொடர்ந்து கேரள போலீசாருக்கு, சுஜய் தப்பி சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை தனிப்படை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கண்ணூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் நேற்று அதிகாலை 3 மணிக்கு தனிப்படை போலீசார் பிடித்து, பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வீட்டில் வைத்து ஏற்பட்ட தகராறில் ரேஷ்மா முதலில் சுபலட்சுமியை கத்தியால் குத்தி உள்ளார். அதன்பிறகு சுஜயையும் கத்தியால் குத்தியது தெரியவந்தது. தற்போது ரேஷ்மா 8 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரும் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
காதலிக்க தொடங்கினர்
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய், அதே பகுதியில் வசித்த ரேஷ்மா என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு காதலித்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையில் சுஜய் தொடங்கிய தனியார் நிறுவனத்தில் சுபலட்சுமி வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவரை ஒரு வாலிபர் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதை சுஜயையிடம் அவர் கூறி உள்ளார். இந்த பிரச்சினையில் சுஜய் தலையீட்டு சரிசெய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சுபலட்சுமியும், சுஜயுடன் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில் ரேஷ்மாவின் பெற்றோர் இறந்ததால், அவரை தனது வீட்டிற்கு சுஜய் அழைத்து வந்து உள்ளார். பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு சுஜய்யும், ரேஷ்மாவும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பொள்ளாச்சிக்கு வந்து வாடகை வீட்டில் 2 பேரும் குடும்பம் நடத்தி வந்து உள்ளனர். இந்த நிலையில் சுபலட்சுமிக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது சுஜயைக்கு தெரியவந்ததால், தட்டி கேட்டு உள்ளார்.
கத்தியால் குத்தினர்
இதற்கிடையில் சுஜய், சுபலட்சுமியை காதலித்த விஷயம் ரேஷ்மாவிற்கு தெரியவந்ததால் அவருடன் வீட்டில் சண்டை போட்டு உள்ளார். அதற்கு சுஜய், சுபலட்சுமியை வீட்டிற்கு வரவழைத்து உனக்கு உண்மையை புரிய வைப்பதாக கூறி உள்ளார். அதன்படி சுபலட்சுமியை தொடர்பு கொண்டு பொள்ளாச்சிக்கு வந்தால் பிரச்சினையை பேசி தீர்த்துகொள்ளலாம் என்று சுஜய் கூறினார். இதை நம்பி சுபலட்சுமியும் கோவையில் இருந்து பஸ்சில் பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் சுஜய் டி.கோட்டாம்பட்டியில் உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு ரேஷ்மாவை பார்த்ததும் சுபலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுஜயையிடம் என்னை காதலித்து வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறாயா என்று கூறியதாக தெரிகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதில், ரேஷ்மாவுக்கும், சுபலட்சுமிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரத்தில் கத்தியை எடுத்து ரேஷ்மா, சுபலட்சுமியின் வயிற்றில் குத்தி உள்ளார். அவர் சத்தம் போட்டதால் சுஜய் கத்தியை பிடுங்கி கழுத்தில் குத்தியது தெரியவந்தது. பின்னர் சுஜயின் தாயிடம் இதுகுறித்து கூறி விட்டு இருவரும் கேரளாவுக்கு தப்பி சென்று உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் கர்ப்பிணி பெண், கணவனுடன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








