விக்கிரவாண்டி அருகேகார் மோதி கர்ப்பிணி சாவுகணவருக்கு தீவிர சிகிச்சை
விக்கிரவாண்டி அருகே கார் மோதி கர்ப்பிணி இறந்தார். படுகாயமடைந்த அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 25). இவரது மனைவி வாசுகி (23). இவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். சம்பவத்தன்று இவரை மருத்துவ பரிசோதனைக்காக சதீஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்பரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதனை முடிந்த பின்னர், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். விக்கிரவாண்டி வராக நதி பாலம் அருகே வந்த நிலையில், பின்னால் சென்னையை நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாசுகி பரிதாபமாக இறந்தார். சதீஷ்குமார் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.