ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி


ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி
x
தினத்தந்தி 6 Aug 2023 8:00 PM GMT (Updated: 6 Aug 2023 8:00 PM GMT)

2-வது சீசனுக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

ஊட்டி

2-வது சீசனுக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. அப்போது சமவெளி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். அதன் பின்னர் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்கிறது.

இதனால் வார இறுதி நாட்கள் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர்ந்து 2-வது சீசன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்களில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக 60 வகையான மலர் நாற்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

60 வகையான நாற்றுகள்

இதேபோல் ஊட்டி பகுதியில் உள்ள அனைத்து பூங்காவிலும் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தாவரவியல் பூங்காவில் இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லூபின், கேண்டிடபட், காஸ்மஸ், கூபியா, பாப்பி, லில்லியம், அஜிரெட்டம், கிரைசாந்திமம், கேலண்டுலா, ஹெலிக்ரைசம், சப்பனேரியா, பெட்டுனியா என 60 வகையான 4 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய உள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் மலர் அலங்காரத்திற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், கேலாலில்லி, டேலியா, அந்தூரியம் உள்பட 30 வகையான நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இந்த பணி இம்மாத இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 2-வது சீசனின் போது மலர் செடிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூத்துக் குலுங்கும். அதற்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


Next Story