இன்று ஆடிப்பெருக்கு விழாகாவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரம்


இன்று ஆடிப்பெருக்கு விழாகாவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
x
சேலம்

தேவூர்

இன்று ஆடிப்ெபருக்கு விழாவையொட்டி, காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு விழா இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காவிரி கரை மற்றும் நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் கூடி, நீராடி, புத்தாடைகள் அணிந்து படித்துறையில் தலைவாழை இலை போட்டு காவிரி தாய்க்கு, காப்பரிசி, பழங்கள், காதோலை, கருகமணி உள்பட மங்கல பொருட்கள் வைத்து படையலிட்டு, கற்பூர தீபம் காட்டி வழிபடுவார்கள்.

அந்த வகையில், தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்த தலமாக கருதப்படுவதால் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று, சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட வருவார்கள்.

அவர்கள் தங்களது குலதெய்வ கோவிலில் உள்ள சாமி சிலைகள், ஈட்டி, கத்தி, வேல் போன்ற பொருட்களை கொண்டு வந்து காவிரி ஆற்றில் கழுவி பூஜை செய்வது வழக்கம். பின்னர் அவர்கள் ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து தங்கள் ஊர்களுக்கு எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புனித நீராடுவார்கள்

அந்த வகையில் இன்று எடப்பாடி, தேவூர், ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, சங்ககிரி, கொண்டலாம்பட்டி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பல்வேறு வாகனங்களில் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து சென்று உள்ளூரில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாக்களை பூச்சாட்டுதலுடன் தொடங்க அதிகளவில் வருவார்கள்.

இதனால் சேலம் மாவட்டத்தில் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழாவான இன்று பக்தர்கள் அதிகாலை முதலே குடும்பத்துடன் திரளாக வந்து காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், செல்லா நாணயங்களை வைத்து புனித நீராடுவார்கள்.

அவர்கள் ஆற்றங்கரையில் ஆங்காங்கே இருக்கும் கற்களை எடுத்து சாமியாக கற்களை வைத்து பூ மாலை அணிவித்து மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து வழிபடுவதும், அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலில் வழிபாடு செய்த பிறகு மேளதாளத்துடன் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள்.

மேலும் கிராம மக்கள் தங்களது மோட்டார் சைக்கிள், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை காவிரி ஆற்றில் கழுவி பூஜை செய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் கல்வடங்கம் காவிரி ஆறு ஆடிப்பெருக்கு அன்று மக்கள் வெள்ளத்தில் களை கட்டும்.

ஏற்பாடுகள் தீவிரம்

இதை முன்னிட்டு, தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதிகள் என முன்னேற்பாடு பணியில் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர்.

குறிப்பாக ஆற்றங்கரையில், தடுப்பு பலகை மற்றும் காவிரி ஆற்றில் பந்தல் அமைத்து ஆங்காங்கே ஒலி பெருக்கி அமைத்தும், காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு தடுப்பு கயிறு கட்டியும், பற்றும் ரப்பர் படகு மூலம் காவிரி ஆற்றில் ரோந்து பணியில் நேற்று முதலோ ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஆடிப்ெபருக்கு விழா முன்னேற்பாடு பணியில், வருவாய்த்துறையினர், கோனேரிப்பட்டி அக்ரகாரம் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.


Next Story