தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரம்
ஊட்டியில், 2-வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சந்திரயான் விண்கல அலங்காரம் இடம் பெறுகிறது.
ஊட்டி
ஊட்டியில், 2-வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சந்திரயான் விண்கல அலங்காரம் இடம் பெறுகிறது.
2-வது சீசன்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறும்.
கடந்த முதல் சீசனில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்பட்டது.
தாவரவியல் பூங்கா
தற்போது 2-வது சீசன் தொடங்க உள்ளது. இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி புல்தரைகள் தண்ணீர் ஊற்றி பராமரிப்பட்டது. அதிகமாக வளர்ந்து இருந்த புற்கள் எந்திரம் மூலம் வெட்டி அழகுபடுத்தப்பட்டது.
இந்த பணியால் பெரிய புல்வெளி மைதானம், பெரணி இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
125 ரகங்கள்
இது தவிர முதல் சீசனின்போது காட்சிப்படுத்தப்பட்ட மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு, நர்சரியில் புதிய நாற்றுகள் உற்பத்தி செய்து வளர்க்கப்பட்டது.
அவை 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன. மீதமுள்ள 125 ரகங்களை சேர்ந்த 4½ லட்சம் மலர் நாற்றுகள் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் நடவு செய்யப்பட்டன.
அதில் பிரெஞ்சு மேரிகோல்டு, சால்வியா, டையான்தஸ், பிகோனியா, ஜீனியா, டேலியா, செல்லோசியா, பெட்டுனியா, பிளாக்ஸ், கேலண்டுலா உள்ளிட்ட ரக மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்குகின்றன.
சந்திரயான் விண்கலம்
இதற்கிடையில் மலர்கள் பூத்துக்குலுங்கும் பூந்தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலும் பூந்தொட்டிகளை கொண்டு சந்திரயான் விண்கலம் உள்ளிட்ட அலங்காரங்கள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு, அங்குள்ள ஜப்பான் பூங்காவில் அந்த நாட்டு கலாச்சாரத்தை விவரிக்கும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் டிராகன் உருவத்துடன் கூடிய கேசிபோ என்ற பார்வையாளர் மாடம், ரூ.2 லட்சம் செலவில் மீன் உருவத்தில் நீரூற்று அமைக்கப்பட்டு உள்ளது.