ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை- புதுச்சேரியில் 2 நாள் டிரோன்கள் பறக்க தடை


ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை- புதுச்சேரியில் 2 நாள் டிரோன்கள் பறக்க தடை
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

புதுச்சேரி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். நாளை ஜிப்மரில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லைனியர் ஆக்சிலேட்டர் என்ற உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில்லில் நடக்கும் அரவிந்தர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் புதுவை வான்பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்கள் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார். 1,500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை ஜிப்மருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டியே காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.


Next Story