ஜனாதிபதி திரவுபதி முர்மு குன்னூர் நிகழ்ச்சி திடீர் ரத்து


ஜனாதிபதி திரவுபதி முர்மு குன்னூர் நிகழ்ச்சி திடீர் ரத்து
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோசமான வானிலை காரணமாக குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெற இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

கோயம்புத்தூர்

கோவை

மோசமான வானிலை காரணமாக குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெற இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வந்தார். இதற்காக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் அவரது மகளும் வந்திருந்தார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார். தொடர்ந்து அங்குள்ள லிங்க பைரவி தேவி, நந்தி சிலைகளை வழிபட்டார். தொடர்ந்து ஆதியோகி சிலை முன்பு நடந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

குன்னூர் பயணம் ரத்து

இந்த நிலையில் நேற்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு, ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் ஜனாதிபதியை வரவேற்க மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் ராணுவ அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் குன்னூர் காட்டேரி பகுதியில் அதிகாலை முதல் மதியம் வரை கடுமையான பனிமூட்டம் நிலவியது. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் செல்லும் ஜனாதிபதி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஜனாதிபதியின் குன்னூர் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி புறப்பட்டு சென்றார்

இதைத்தொடர்ந்து அவர் கோவையில் இருந்து தனி விமான மூலம் மதியம் 12.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஜனாதிபதியை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா, வருவாய்த்துறை நில நிர்வாக ஆணையாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

குன்னூர் காட்டேரி பகுதியில் மோசமான வானிலை காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி ராணுவ முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். எனவே நேற்றும் மோசமான வானிலை நிலவியதால் ஜனாதிபதியின் பாதுகாப்பை கருதி குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story