ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை..!


ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை..!
x

பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகிறார்.

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவும் பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வருகிறார். இந்த நிலையில் நாளை மறுநாள் (ஜூலை 2) பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வரும் திரவுபதி முர்மு, அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களைச் சந்தித்து ஆதரவு கோர உள்ளார். இதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பானது நட்சத்திர ஓட்டலில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story