கடையில் எண்ணெய் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


கடையில் எண்ணெய் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

கடையில் எண்ணெய் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மகாலிங்கநகரில் வசித்து வருபவர் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி (வயது 60). இவர், தனது வீட்டிற்கு அருகே கடையில் செக்கில் ஆட்டிய எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஒரே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் எண்ணெய் கடைக்கு வந்தனர். அப்போது கடையில் சுந்தரமூர்த்தியின் மனைவி சாந்தி (57) இருந்துள்ளார். அவரிடம் எண்ெணய் வேண்டும் என கேட்ட மர்ம நபர்கள் எண்ணெய்யை கொடுக்க முயன்றபோது சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் எண்ணெய் வாங்குவது போல் நடித்து அவரது தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

பொன்னேரி பர்மா நகரில் வசிப்பவர் கலைச்செல்வி (43). இவர் செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் வீரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் சைனாவரம் கிராமத்தில் உள்ள காய்கறி கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 2 மர்ம நபர்கள் நின்றுக்கொண்டிருந்த கலைச்செல்வி கழுத்தில் கிடந்த 1 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து கலைச்செல்வி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story