கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க வேண்டும்

கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க வேண்டும்
மூட்டைக்கு ரூ.50 வரை கட்டாய வசூல் செய்யப்படும் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் முகமூடி அணிந்து விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் சிலர் முகமூடி அணிந்து, கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
முகமூடி அணிந்து அம்மையகரம் ரவிச்சந்தர் பேசியதாவது:- விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என உணவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டும், கொள்முதல் நிலைய பணியாளர்கள், சுமைதூக்கும் பணியாளர்கள் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.50 வரை முறைகேடாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பெற்று கொள்கின்றனர்.
பணம் கொடுக்கவில்லை என்றால் வாரக்கணக்கில் விவசாயிகளை காக்க வைக்கின்றனர். அதே போல் 40 கிலோ மூட்டைக்கு 3 கிலோ வரை கூடுதலாக எடை வைத்து எடுக்கின்றனர். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ரவுடிகளைப் போல் செயல்படுகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை தடுத்தது போல், கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்தால் தான் விவசாயிகளை காப்பாற்ற முடியும்.
சிறுதானிய விதை உற்பத்தி
ஆம்பலாப்பட்டு தெற்கு தங்கவேல்:- சிறுதானிய விதை உற்பத்தியை அரசு செய்ய வேண்டும். தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது. 33 சதவீதம் விதை உற்பத்தியை அதிகரித்து அரசே விவசாயிகளுக்கு நேரடியாக விதையை வினியோகம் செய்ய வேண்டும். அப்போது தான் தரமான விதை கிடைக்கும். மகசூலும் அதிகமாகும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- கரும்பு உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை உரிய காலத்தில் வழங்க அரசு உடனடியாக அரசானண வெளியிட வேண்டும். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் இம்மாதம் 31 -ம் தேதியோடு அரவை நிறுத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் 25 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட வேண்டும். எனவே மேலும் ஒரு வார காலம் அரவை பணியை நீட்டித்து இன்னும் வெட்டப்படாமல் உள்ள கரும்புகள் அனைத்தும் வெட்டிய பின்னர் அரவை நிறுத்த வேண்டும்.
அதிகாரிகள் இல்லை
திருப்பூந்துருத்தி சுகுமாரன்:- கூட்டுறவு நிலவள வங்கிகள் மறுசீரமைப்பு செய்ய நிதி வழங்க வேண்டும். காவிரி மற்றும் குடமுருட்டி ஆறுகளில் கொட்டி எறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் யாரும் இல்லாமல் கூட்டம் நடத்துவது சரியல்ல. அவர்களை வர சொல்ல வேண்டும்.
நாகத்தி கோவிந்தராஜ்:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க வேண்டும். இவைகள் பல பரிமாணத்திற்கு ஆளாகிவிட்டது. மூட்டைக்கு ரூ.50 வாங்கப்படுவதை தடுக்காவிட்டால் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
தூர்வாரும் பணி
ராயமுண்டான்பட்டி கண்ணன்:- தற்போது சம்பா நெல் அறுவடை பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே தண்ணீர் வரும் காலம் வரை காத்திருக்காமல் ஏரி, குளங்கள், ஆறுகள், வரத்து வடிகால், வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






