வடகாட்டில் எலுமிச்சை பழங்கள் விலை வீழ்ச்சி


வடகாட்டில் எலுமிச்சை பழங்கள் விலை வீழ்ச்சி
x

வடகாட்டில் எலுமிச்சை பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.10-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

புதுக்கோட்டை

எலுமிச்சை பழங்கள்

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்களையும், மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களையும் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். இதேபோல் எலுமிச்சை சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எலுமிச்சை மரக்கன்றுகளை தனியாகவும், ஊடு பயிராகவும் பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள்.

இங்கு உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்கள் உள்ளூர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மூலமாக திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கிலோ ரூ.10-க்கு விற்பனை

எலுமிச்சை பழங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓட்டல், டீக்கடை, குளிர்பான கடைகள், பெட்டிக்கடைகள், காய்கறி கடைகள், ஊறுகாய் நிறுவனங்கள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழங்களை ரூ.10-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால் தோட்ட பராமரிப்பு, தொழிலாளர்களின் கூலி, உரம் உள்ளிட்ட தேவைகளுக்கு கட்டுப்படியாகவில்லை. எனவே விவசாய விளை பொருட்களை மதிப்புக்கூட்டும் முறையில் விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story