திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100-க்கு மேல் உயர்வு
தீபாவளி வரை சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய காய்கறி சந்தைகளில் ஒன்றான ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செல்லப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்தது. இதனிடையே மழை காரணமாக ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகள், திருச்சி, நாமக்கல், கரூர், ராசிப்பாளையம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த 4 நாட்களாக கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், இன்று 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி வரை சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.