கோவிலில் திருடிய பூசாரி கைது
விக்கிரமசிங்கபுரத்தில் கோவிலில் திருடிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் கட்டபுளி கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகவேல் (வயது 63). இவர் அதே பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் நிர்வாகியாக தற்போது இருந்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி இவர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலுக்கு சொந்தமான பொருட்களான திருமாங்கல்யம், கண்மலர், நெற்றி பொட்டு, பொட்டு தாழி, வெள்ளி கொலுசு, பித்தளை குத்துவிளக்கு போன்ற பொருட்கள் காணமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகவேல், விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இக்கோவிலில் பூசாரியாக வேலை செய்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (33) என்பவர் மற்றும் 2 வருடத்திற்கு முன்பு இக்கோவிலில் நிர்வாகியாக இருந்த மாரியப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சொந்தமான பொருட்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.