ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்


ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்
x

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்::

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாதிரியார் கைது

கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர், இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிபாறையை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார்.

அதன்படிபாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

குற்றப்பத்திரிகை

இந்தநிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு பெண், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் மீதும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மூலம் பாதிரியார் மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக பாதிரியாரை ஒரு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து மேலும் ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பாதிரியார் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

நிபந்தனை ஜாமீன்

இதற்கிடையே பாதிரியாருக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவர் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அருள்முருகன் உத்தரவிட்டார். மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவரால் வெளியே வரமுடியவில்லை.

இந்தநிலையில் மற்றொரு வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி அருள்முருகன் நேற்று முன்தினம் பெனடிக்ட் ஆன்றோவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் தினமும் காலை மற்றும் மாலையில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு குற்றவியல் வக்கீல் லீனஸ்ராஜ் ஆஜரானார்.


Next Story