பன்றிமலையில் ரூ.1¼ கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்


பன்றிமலையில் ரூ.1¼ கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்
x
தினத்தந்தி 3 April 2023 7:30 PM GMT (Updated: 3 April 2023 7:30 PM GMT)

பன்றிமலை கிராமத்தில் ரூ.1¼ கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

ஆரம்ப சுகாதார நிலையம்

ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பன்றிமலையில், ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வேலுசாமி எம்.பி., திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, பன்றிமலை ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராகவானந்தம், துணைத்தலைவர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது என்றார்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து 25 பேருக்கு வீட்டுமனை பட்டா, 32 பேருக்கு நிலப்பட்டா, 25 பேருக்கு புதிய ரேஷன்கார்டு, 153 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 312 பேருக்கு விவசாய கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கன்னிவாடி நகர தி.மு.க. செயலாளர் இளங்கோ, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி சண்முகம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியமேரி சுதா, ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்செல்வி முத்துகிருஷ்ணன், பிரபாகரன், ரமேஷ், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரங்கசாமி, புதுப்பட்டி ஊராட்சி செயலர் உதயகுமார், புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அருணாச்சலம், பன்றிமலை ஊராட்சி செயலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆடலூர்

இதேபோல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஆடலூர் மலைக்கிராமத்தில், தமிழக அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது, விழாவுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, ஆடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, துணைத்தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு 16 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், தர்மத்துபட்டியில் இருந்து ஆடலூருக்கு தி.மு.க. ஆட்சியில் தான் தார்சாலை அமைக்கப்பட்டது. ஆடலூர் கிராமத்துக்கு பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்ததும் தி.மு.க. அரசு தான். 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சில்வர் ஓக் மரங்களை மலைக்கிராம மக்கள் வெட்டுவதற்கு தி.மு.க. ஆட்சியில் அனுமதி பெற்று கொடுக்கப்பட்டது. மலைக்கிராம மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தி.மு.க. அரசு தயாராக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து நிறை, குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.

விழாவில் அண்ணாநகர் கிளை தி.மு.க. செயலாளர் சத்தியசீலன், ஆடலூர் கிளை செயலாளர் பாஸ்கரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அதிகாரி செல்லமுத்து, டாக்டர் காவியா, மேற்பார்வையாளர் கமாலுதீன், சுகாதார ஆய்வாளர் கோபால், சமுதாய நல செவிலியர் ராணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story