பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம்
எம்மேகவுண்டன்பாளையத்தில் பழுதடைந்த கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெகமம்,
எம்மேகவுண்டன்பாளையத்தில் பழுதடைந்த கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் செட்டியக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்மேகவுண்டன்பாளையம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதால், கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அவ்வப்போது கீேழ விழுகின்றன. மேலும் கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதன் காரணமாக இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எம்மேகவுண்டன்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது. அவ்வப்போது பழுதடைந்த கட்டிடத்தில் இருந்து கற்கள் கீழே விழுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் ஒழுகி வருகிறது.
இதனால் அறையில் நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணிகள் சிகிச்சை பெற தயக்கம் காட்டி வருகின்றனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக அங்குள்ள பள்ளியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து விரைவில் சீரமைக்க வேண்டும். அல்லது புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.