அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2023 12:30 AM IST (Updated: 25 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுவதை கல்வித்துறை கைவிட வேண்டும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை


கிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுவதை கல்வித்துறை கைவிட வேண்டும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டம்

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:-

எண்ணும் எழுத்தும் திட்டத்தால் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறோம். ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அலைபேசி செயலி வழியாக சோதிக்கப்படுவதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு வினாத்தாள்கள் அவரவர்களின் கற்றல் நிலைகளுக்கு ஏற்ப மூன்று வகையாக செயலியில் வெளியிட்டுள்ளனர். இந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு நகலெடுத்து தேர்வு வைக்க வேண்டும் என எஸ்.சி.இ.ஆர்.டி. இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடிப்படை கட்டமைப்பு

அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆரம்பப்பள்ளிகளில் இணைய வசதி, பிரிண்டர் மற்றும் பிற வசதிகள் இல்லாத காரணத்தால் தேர்வு வைப்பதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வினாதாள்கள் செயலியில் வெளியிட்ட பின்னர் நகர் பகுதிகளில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தனியார் கணினி மையங்கள் வினாத்தாள் பதிவிறக்கம் மற்றும் நகலெடுத்து தருவதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். இதற்கான நிதி ஆதாரங்கள் ஆரம்பப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஏற்கனவே எமிஸ் இணையதளத்தில் பல்வேறு பணிகளை செய்வதற்கு ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் ஆன்லைன் வழி தேர்வுகள் என்ற முறையில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் அவதிக்கு உள்ளாக்குவதை கல்வித்துறை கைவிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


Next Story