கடலூரில்தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


கடலூரில்தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

கடலூரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். ஈ.எம்.ஐ.எஸ். வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும்.

பள்ளி இணைப்புகள், கற்பித்தலுக்கு தன்னார்வலர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியமர்த்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மார்ச் 18-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

உண்ணாவிரத போராட்டம்

அதன்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலூர் மாவட்ட கிளை சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் வரவேற்றார். மாநில துணை செயலாளர் செல்வி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அந்தோணி ஜோசப், முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாநில துணை தலைவர்கள் அரிகிருஷ்ணன், ஏழுமலை, மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், சத்தியபிரியா, மாவட்ட துணை தலைவர்கள் கிடியன் எபிநேசர் பாக்கியராஜ், சம்பத், சரவணன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story