ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கியதை போல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
அரசு ஆசிரியர்களின் இன்றைய பணி சூழலை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கூடலூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷம்
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சஜி தலைமை தாங்கினார். செயலாளர் நதிரா அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் பத்மநாதன், மாநில செயலாளர் சுனில் குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பணிக்கு லட்சக்கணக்கானவர்கள் காத்திருக்கும் நிலையில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலமாக மதிப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து கொட்டும் மழையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார். இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கூறும்போது,
ரத்து செய்ய வேண்டும்
தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும். 2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இதுவரை நடத்தப்படாத மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.