முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ஜவுளி பூங்கா பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்குமா?


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ள  ஜவுளி பூங்கா பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்குமா?
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ஜவுளி பூங்கா பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்குமா என கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

தென் மாவட்டங்கள் தொழில்மயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த போதிலும் அது செயல்பாட்டிற்கு வராத நிலையே நீடித்தது.

ஜவுளி பூங்கா

மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அருப்புக்கோட்டையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில் அது பல்வேறு காரணங்களால் செயல்பாட்டுக்கு வராத நிலை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் விருதுநகர்-சாத்தூர் இடையே தொழில் முதலீட்டு மையம் அமைக்க திட்டமிட்ட நிலையில் ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசின் ஒப்புதல் கிடைக்காததால் இத்திட்டமும் கைகூடவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த 2015-ல் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா விருதுநகர்-சாத்தூர் இடையே 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட்தொழிற் பூங்கா அமைக்கப்படுமென அறிவித்தார். இதற்கானநிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்தது. ஆனாலும் திட்டம் நிறைவேறாமலேயே கிடப்பில் போடப்பட்டது.

முதல்-அமைச்சர் அறிவிப்பு

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. அரசு மாநில அரசின் தொழில் கொள்கையில் மாற்றம் செய்து தனியார் பங்களிப்புடன் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்ததோடு விருதுநகர்-சாத்தூர் இடையே தொழில் பூங்காவிற்கான நிலத்தின் விலை அதிகமாக இருப்பதால் தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலப்பரப்பினை 2 ஆயிரம் ஏக்கரிலிருந்து இருந்து 1,500 ஏக்கராக குறைப்பதாகவும் அறிவித்தது.

ஆனாலும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர்-சாத்தூர் இடையே மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படுமென அறிவித்தார். இதை தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகர்- சாத்தூர் இடையே சிப்காட் சார்பில் குமாரலிங்காபுரத்தில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் ஜவுளிப்பூங்கா சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பொருளாதார மேம்பாடு

மேலும் இதற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் மாவட்டம் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் திட்டத்தை அறிவித்துள்ளது. இம்மாவட்ட மக்களுக்கு பெரு மகிழ்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் மாவட்டம் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாட்டு அடைய வாய்ப்பு கிடைப்பதோடு மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைப்பதுடன் தொழில் முனைவோர் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசு விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டம்புதூர் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் அதற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்படாத நிலையில் தமிழக அரசு ஜவுளி பூங்கா அறிவிப்பினை செயலாக்கம் பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மனநிறைவு

மாணிக்கம் தாகூர் எம்.பி.:-

பெரும்பாலும் மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளத்தை மேம்படுத்தும் வகையில் தொழிற்பூங்கா அமைக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்றக்தக்கது. விருதுநகர் மாவட்டம் பொருளாதார மேம்பாடு அடையவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படுவதோடு தொழில்முனைவோர் பலரை ஊக்கப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசின் ஜவுளிப்பூங்கா அறிவிப்பு செயல்பாட்டிற்கு வராதநிலையில் இந்த அறிவிப்பு இத்தொகுதி எம்.பி. என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்துகிறது.

இதற்காக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தொழில் தொடங்க வாய்ப்பு

ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ:-

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விருதுநகர்- சாத்தூர் இடையே தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வராத நிலையில் முதல்-அமைச்சரின் குமாரலிங்காபுரத்தில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்ததோடு அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் படித்த கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் விவசாயம் மற்றும் வணிகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டுள்ள பலர் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் விருதுநகர் மாவட்டம் பொருளாதார மேம்பாடு அடையும். எனவே முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர்:-

எங்கள் யூனியன் பகுதியில் உள்ள குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. கிராமப்புறம் பொருளாதாரம் மேம்பாடு அடையவும், படித்த கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வேலை வாய்ப்பு பெறவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த நடவடிக்கை விருதுநகர் பகுதியில் ஒரு தொழில் புரட்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இதற்காக முதல்-அமைச்சருக்கும், மாவட்ட அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் உதவி

என்ஜினீயர் வடிவேல்:-

விருதுநகர்-சாத்தூர் இடையே ஏற்கனவே ஒரு சில நூற்பு மில்கள் இருந்த போதிலும் இப்பகுதி தொழில்மயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது முதல்-அமைச்சரின் அறிவிப்பு இப்பகுதி தொழில்மயமாவதற்கு வாய்ப்பு ஏற்படும். இப்பகுதியில் உள்ள தொழில் முனைவோருக்கும் தொடர்ந்து தமிழக அரசு தேவையான உதவிகளை செய்து தர வேண்டியது அவசியமாகும். அதன் மூலம் இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்படும்.

ஆயத்த ஆடை

விருதுநகரை சேர்ந்த தொழில்முனைவோர் பிரசன்னா:-

நான் சிறிய அளவில் விருதுநகர் பகுதியில் ஆயத்த ஆடை தொழில் செய்து வருகிறேன். தற்போது முதல்-அமைச்சர் அறிவித்துள்ள ஜவுளிப்பூங்கா செயல்பாட்டிற்கு வந்தால் என்னை போன்ற தொழில் முனைவோருக்கு தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு ஏற்படும். மேலும் தற்போது சிறிய அளவிலான எண்ணிக்கையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துவரும் நிலையில் ஜவுளிப்பூங்கா வரும் நிலையில் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு தர வாய்ப்பு ஏற்படும்.

இந்த ஜவுளி பூங்காவில் தொழிலை விரிவுப்படுத்தி செய்ய தமிழக அரசு என்னை போன்ற பெண் தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதன் மூலம் பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story