முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கிறார்
x

இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

சென்னை,

சென்னையில் கடந்த ஜூலை 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. செஸ் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று சென்னைக்கு வந்த அவர், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

டெல்லி பயணம்

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று மாலை 5.10 மணி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் டெல்லி சென்றுள்ளனர். நேற்று இரவு அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பது முதன்முறையாகும்.

கோரிக்கைகள்

பின்னர் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி கூறுகிறார். மேலும், தமிழக நலன் சார்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்துவதும் மற்றும் அதற்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனுவையும் பிரதமரிடம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில சட்ட மசோதாக்களுக்கு கவர்னரிடம் இருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை. நீட் விலக்கு சட்ட மசோதாவும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம், மு.க.ஸ்டாலின் நேரில் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டெல்லியில் இந்த சந்திப்பை முடித்துவிட்டு மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு இரவு 10.40 மணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.


Related Tags :
Next Story