முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து வருகிறார்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து வருகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து வருகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
சாதனை விளக்க கண்காட்சி
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நேற்று தொடங்கியது. கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் கண்காட்சியினை தொடங்கி வைத்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
வழக்கமாக ஓராண்டு சாதனை. இரு ஆண்டு சாதனை என குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு பல துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தாங்கள் தொடர்புடைய மக்களை அழைத்து வந்து இந்த கண்காட்சியினை பார்க்க செய்ய வேண்டும்.
அயராது உழைப்பு
திராவிட மாடல் ஆட்சியில் ஏழை, பணக்காரர் என வித்தியாசமின்றி சாதி, வேறுபாடின்றி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார். கடந்த ஆட்சியை போல் இல்லாமல் இந்த ஆட்சியில் அதிகாரிகளை விரட்டி வேலை வாங்குகிறோம்.
விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நல்ல அதிகாரிகள் குழு அமைந்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர்கள் சுமதி ராஜசேகர், நிர்மலா கடற்கரை ராஜ், சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன் வரவேற்றார். முடிவில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி கதிரவன் நன்றி கூறினார். இந்த புகைப்பட கண்காட்சி பிப்ரவரி 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.