முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்துள்ளார்-துரைமுருகன் பேச்சு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்துள்ளார்-துரைமுருகன் பேச்சு
x

ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்துள்ளார் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார்.

திருச்சி

ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சகாப்தம் படைத்துள்ளார் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார்.

அனைத்து மனுக்களுக்கும் தீர்வு

திருச்சியில் நடந்த தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தபிறகு, இந்த இயக்கத்தை எப்படி கட்டி காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டது. அந்த பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றார். சிலபேர் கருணாநிதிபோல் இவரால் செயல்பட முடியாது என்றார்கள். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி தற்போது இந்த இயக்கம் 2 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாறி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எவரும் செய்ய முடியாத சாதனையை மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.. முதல்-அமைச்சர் செல்லும் இடமெல்லாம் அவரை பார்த்து மக்கள் நன்றாக இருக்கிறீர்களா? என அன்போடு கேட்கிறார்கள்.

முதல்-அமைச்சரிடம் வழங்கப்படுகிற கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கிறது. அனைத்து மனுக்களையும் மாவட்டம் வாரியாக, தாலுகா வாரியாக பிரித்து ஒவ்வொரு மனுவுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கிறார். இது ஒரு புதிய சகாப்தம். அந்தகாலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பு படைவீரர்களை ஓரிடத்தில் திரட்டி தயார்படுத்துவார்கள். அதற்கு பாசறை என்று பெயர். அதேபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை முதல்-அமைச்சர் உங்களுக்கு எடுத்து கூறுவார். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சரை நம்புங்கள்

தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேசும்போது, "கட்சியில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து தலைவர் சொல்கிற அனைத்து பணிகளையும் திறம்பட செய்து, கட்சியால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளேன். நீங்கள் வேறு யாரையும் நம்பவேண்டாம். தலைவர் மு.க.ஸ்டாலினை நம்புங்கள். அவர் உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை தருவார். இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. இந்த ஆட்சியில் குறைகூற எண்ணுகிறார்கள். அதையெல்லாம் தவிடுபொடியாக்கி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். நமது முதல்-அமைச்சரே இந்தியாவின் பிரதமர் யார்? என நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார்" என்றார்.


Next Story