ராகுல்காந்தியின் எழுச்சியால் பிரதமர் மோடி அச்சம்-மதுரையில் ஜவாஹிருல்லா பேட்டி


ராகுல்காந்தியின் எழுச்சியால் பிரதமர் மோடி அச்சம்-மதுரையில் ஜவாஹிருல்லா பேட்டி
x

ராகுல்காந்தியின் எழுச்சியால் பிரதமர் மோடி அச்சம் அடைந்துள்ளார் என மதுரையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

மதுரை

ராகுல்காந்தியின் எழுச்சியால் பிரதமர் மோடி அச்சம் அடைந்துள்ளார் என மதுரையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து மற்றும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மதுரை தெற்குவெளிவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஜவாஹிருல்லா பேசும் போது:-

கர்நாடக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வி முகத்தில் இருந்து வருவதால் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் முஸ்லிம்களின் உரிமையை பறித்துள்ளது. கர்நாடக தேர்தல் மட்டுமின்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. பெரும் தோல்வியை சந்திக்கும் என்றார்.

காங்கிரஸ் சட்ட பேரவைக்குழு முன்னாள் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், ராகுல் காந்தியை பழிவாங்குவதற்காக அவதூறு வழக்கை பா.ஜ.க. கையிலெடுத்துள்ளது. ராகுல் காந்தியின் பதவியை பறித்து விட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. மக்களின் ஆதரவுடன் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் என்றார்.

மோடி அச்சம்

முன்னதாக ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறுகையில், ராகுல்காந்திக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை கண்டு பிரதமர் நரேந்திர மோடி அச்சம் அடைந்துள்ளார் என்பதன் வெளிப்பாடு தான் ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு. அவரது பதவிப்பறிப்பு நடவடிக்கை ஒரு ஜனநாயக படுகொலை. ராகுல்காந்தியின் பதவி பறிப்பு நடவடிக்கை, பா.ஜ.க.வுக்கு பெரும் வீழ்ச்சியாக அமைந்து விட்டது. முன்பு ராகுல்காந்தியை எதிர்த்த கட்சிகள், இயக்கங்கள் கூட தற்போது அவரது தலைமையில் அணி திரண்டு வருகின்றன. நாடு முழுவதும் சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை ஒற்றுமைப்படுத்திய பெருமை பிரதமர் நரேந்திர மோடியை சாரும் என்றார்.


Related Tags :
Next Story