பிரதமர் மோடியை கவர்னர்-அமைச்சர்கள் வரவேற்றனர்
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர், அமைச்சர்கள் வரவேற்றனர். இதே போன்று முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர், அமைச்சர்கள் வரவேற்றனர். இதே போன்று முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார்.
இதற்காக மதுரைக்கு தனி விமானத்தில் அவர் வந்தார். இதையொட்டி முன்ஏற்பாடாக விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளி வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
விமான நிலைய நுழைவு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
உரிய அனுமதி கடிதங்கள் வைத்திருந்த நபர்கள் மட்டுமே விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கவர்னர் வருகை
பிரதமரை வரவேற்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் காலையில் மதுரை வந்தடைந்தார். பின்னர் அவர் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று காத்திருந்தார்.
சென்னையில் இருந்து காலை 11.30 மணி அளவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், ஒரு மணி அளவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் மதுரையில் உள்ள ஓட்டல்களில் தங்கினர். பின்னர் 2.30 மணிக்கு மேல் மீண்டும் சிறப்பு பாதை வழியாக விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுடன் பிரதமரை சந்திக்க அனுமதி பெற்ற முக்கிய பிரமுகர்களும் சிறப்பு பாதை வழியாக விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு வந்தனர்.
மதுரை வருகை
பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மதியம் 2.50 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி ஆகியோரும், முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.ஆகியோரும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பிலிருந்து எம்.பி. ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு தனித்தனியாக பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
பா.ஜ.க. சார்பில் மூத்த தலைவர் எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.
ெஹலிகாப்டரில் புறப்பட்டார்
இதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல் புறப்பட்டார். பிரதமர் பயணித்த ஹெலிகாப்டர் உள்பட மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் திண்டுக்கல் சென்றன. பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவியும் ஹெலிகாப்டரில் திண்டுக்கல் சென்றார்.