முக்குலத்தோர் வாக்குகளை பிரதமர் குறிவைக்கிறார் - விழுப்புரம் எம்பி ரவிக்குமார்
முக்குலத்தோர் வாக்குகளை பிரதமர் குறிவைக்கிறார் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பிவிடுக்கபட்டு இருந்தது. இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சாதி ரீதியில் மக்களை பிளவுப்படுத்தி, அரசியல் லாபம் பார்ப்பதற்காகவே பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வருவதாக விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் பங்கேற்ற பின் எம்.பி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
மோடி, பிரதமராகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதுதான் தேவர் குருபூஜைக்கு வர வேண்டும் என்று புரிந்ததா என கேள்வி எழுப்பினார்.
மேலும், தேவேந்திர குல வேளாள மக்களை பட்டியலிருந்து நீக்கி சட்டம் இயற்றுவதாக கூறி, அதனை நிறைவேற்றாமல் முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து தேவர் குரு பூஜையில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தென் மாவட்ட மக்கள் பாஜகவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.