முதல்-அமைச்சரின் 9 நாள் வெளிநாட்டு பயணம் நிறைவு: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு


முதல்-அமைச்சரின் 9 நாள் வெளிநாட்டு பயணம் நிறைவு: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டு பயணம்

இந்த நிலையில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை சேர்ந்த தொழில் துறையினரை சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இரு நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அப்போது அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 26-ந் தேதி ஜப்பான் சென்றார். அங்கு 5 நாட்கள் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த சுற்றுப்பயணத்தில் அவரது முன்னிலையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சிங்கப்பூரை சேர்ந்த 6 நிறுவனங்களுடனும், ஜப்பானில் 7 நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

ரூ.3,233 கோடி முதலீடுகள்

பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3,233 கோடிக்கும் மேல் முதலீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும்.

அதுமட்டுமல்லாமல், அந்த நாடுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையையும் முடித்துள்ளார். அந்த வகையில் இந்த இரு நாடுகளில் மேற்கொண்ட 9 நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

சென்னை வந்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று காலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். டோக்கியோவில் அவரை ஜப்பான் நாட்டுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வழி அனுப்பிவைத்தார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.


Next Story