சிவகாசியில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள்; மேலும் 4 பேர் கைது
500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் சிவகாசி அச்சக அதிபர் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் சிவகாசி அச்சக அதிபர் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ள நோட்டு
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் சிவகாசி வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புதாய் (வயது 56) என்ற பெண் பழக்கடையில் பழம் வாங்கிவிட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்றமுயன்ற போது விருதுநகர் மேற்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சுப்புத்தாய் தனது மகள் துரைச்செல்வி (36) என்பவரிடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டை பெற்றதாக தெரிவித்ததின் பேரில் துரைச்செல்வியை பிடித்து விசாரணை செய்ததில் துரைச்செல்வி, தனது தங்கை கணவர் பாலமுருகன் (36) என்பவரிடமிருந்து 500 ரூபாயை பெற்றதாக தெரிவித்தார்.
அச்சக அதிபர்
ேமலும், துரைச்செல்வியிடம் இருந்து 54 ஆயிரத்து 500 மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார், பாலமுருகனிடம் விசாரணை நடத்தி அவரிடமிருந்து 2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டை பறிமுதல் செய்தனர். பாலமுருகன் தேவர்குளத்தை சேர்ந்த அருண்(38) என்பவர் தனக்கு 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்ததாக தெரிவித்ததின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அருண் சிவகாசி சாட்சியாபுரத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு சென்று விசாரணை நடத்தி அவரிடமிருந்து 2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டை போலீசார் கைப்பற்றினர். அருண்குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் தேவர்குளத்தை சேர்ந்த நவீன்குமார் (34) என்பவர் அச்சகம் நடத்தி வருவதாகவும், அவரிடமிருந்து தான் 500 ரூபாய் கள்ள நோட்டை அச்சடித்து பெற்றதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
இதையடுத்து போலீசார், அந்த அச்சகத்தில் சோதனை நடத்தி 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பதற்கான கம்ப்யூட்டர் பிரிண்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், மேலும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு அச்சடிப்பதற்கான சான்ட்விச் காகிதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து துரைச்செல்வி, பாலமுருகன், ஜவுளி கடைக்காரர் அருண், அச்சக அதிபர் நவீன்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வேறு எங்கேனும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.