பேராசிரியர் ஆய்வு செய்வதற்கு முன்னதாக அவசரமாக பாலங்களில் மராமத்து பணி செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பேராசிரியர் ஆய்வு செய்வதற்கு முன்னதாக அவசரமாக பாலங்களில் மராமத்து பணி செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Jun 2023 3:32 AM IST (Updated: 27 Jun 2023 8:23 AM IST)
t-max-icont-min-icon

தரமற்ற பாலங்களை ஆய்வு செய்வதற்கு முன்னதாக அவசர அவசரமாக மராமத்து பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தரமற்ற பாலங்களை ஆய்வு செய்வதற்கு முன்னதாக அவசர அவசரமாக மராமத்து பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தரமற்ற பாலங்கள்

நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி-மூலைகரைப்பட்டி சாலையில் கிட்டேரி முதல் பருத்திப்பாடு வரை பல இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாலங்களின் தூண்கள் தரமற்ற முறையில் உள்ளன. தூண்கள், பக்கச்சுவர் மற்றும் பாலத்தில் கான்கிரீட் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. பாலத்தின் அடியில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தரமற்ற வகையில் இந்த பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பாலங்களை வல்லுனர்கள் குழு ஆய்வு செய்யவும், தரமற்ற பாலங்கள் அமைக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பேராசிரியர் ஆய்வு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்வதற்காக திருச்சி தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர் பாஸ்கர் நியமிக்கப்படுகிறார். அவர் உரிய ஆய்வை நடத்தி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேராசிரியர் பாஸ்கர் சார்பில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆய்வுக்கு முன்பாக பாலங்களில் வேலைகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே மனுதாரர் சுந்தரவேல் ஆஜராகி, பேராசிரியர் ஆய்வு செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பொதுப்பணித்துறை சார்பில் அந்த பாலங்களில் உள்ள குறைபாடுகளை மறைக்கும் வகையில் பூச்சு வேலைகள் செய்து, பெயிண்ட் அடித்து மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார். பின்னர் அதுதொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இதையடுத்து, கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அந்த பாலங்களில் மராமத்து வேலைகளை அரசு அலுவலர்கள் செய்து உள்ளனர். இது, கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாகும். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story