இலவச விவசாய மின் இணைப்பில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
இலவச விவசாய மின் இணைப்பில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வீரத்தமிழர் விழுப்புரம் மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரர்களின் நலச்சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தம்புசாமி வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன்தேவ் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளியை அமைக்க வேண்டும், சிவில் பொது சேவை மையங்களில் ராணுவ வீரர்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்து பிறகு சோல்ஜர் போர்டுக்கு அனுப்பும் முறையற்ற செயலை தவிர்க்க வேண்டும், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டுவரி, நிலவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போன்று விழுப்புரம் மாவட்டத்திலும் வீட்டுவரி, நிலவரி விலக்கு அளிக்க வேண்டும், இலவச விவசாய மின் இணைப்பில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜோசப் ஆரோக்கியராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் முனுசாமி நன்றி கூறினார்.