திண்டிவனம் போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்
விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது திண்டிவனம் போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் ரோடியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனி முகமது மகன் அமீர் அப்துல்காதர்(வயது 22). கடந்த மே மாதம் திண்டிவனம் பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைதான அமீர் அப்துல்காதரை திண்டிவனம் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியாக இருந்த அமீர் அப்துல்காதரை நேற்று முன்தினம் கடலூர் மத்திய சிறையில் இருந்து திண்டிவனம் போலீசார் 2 பேர், பஸ்சில் திண்டிவனம் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு இரவில் அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்காக கடலூருக்கு பஸ்சில் அழைத்து வந்தனர்.
தப்பி ஓட்டம்
கடலூர் பஸ் நிலையத்தில் இரவு 9 மணி அளவில் அவர்கள் வந்து இறங்கியதும், அங்கு நின்ற குமளங்குளம் செல்லும் பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது திடீரென அமீர் அப்துல்காதர், 2 போலீஸ்காரர்களையும் தள்ளிவிட்டு, விட்டு கைவிலங்குடன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள், அவரை விரட்டிச்சென்றனர்.
இருப்பினும் அமீர் அப்துல்காதர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மடக்கி பிடித்த போலீசார்
அதன்பேரில், போலீசார் விடிய, விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மோகினி பாலம் அருகில் நடந்து சென்ற அமீர் அப்துல்காதரை போலீசார் மடக்கி பிடித்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.