பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவிக்கு விருது
கள்ளக்குறிச்சியில் நடந்த மகளிர் தின விழாவில் பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவிக்கு நீதிபதி விருது வழங்கினார்.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் நீதிபதி கீதாராணி கலந்து கொண்டு பேசினார். இதில் ஏரி, குளம் ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம், ஏழை மாணவியின் படிப்புக்கு உதவி செய்தல், பிளாஸ்டிக் பொருட்களை தூளாக்கும் எந்திரத்தை பயன்படுத்துதல் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடத்தியது உள்பட பல்வேறு பணிகளை பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவி அமுதா தட்சணாமூர்த்தி சிறப்பாக செயல்படுத்தியதால், அவர் சிறந்த ஊராட்சி மன்ற தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவி அமுதா தட்சணாமூர்த்தியை மாவட்ட கூடுதல் நீதிபதி கீதாராணி பாராட்டி விருது வழங்கினார். இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயனை, ஊராட்சி மன்ற தலைவர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.